கண்மாய் நீரில் பொங்கிய நுரை! திரைகட்டி மறைத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் நூதன நடவடிக்கை


கண்மாய் நீரில் நுரை பொங்குவதை தடுக்க திரை கட்டிய மதுரை மாநகராட்சி

மதுரையில் கண்மாய் நீரில் நுரை பொங்கி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பச்சை திரையை அமைத்து மறைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மதுரை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக கண்மாய் நிரம்பி கடந்த 5 நாட்களாக, உபரிநீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த தண்ணீரில் கழிவு நீர் மற்றும் ரசாயன நீர் கலப்பு காரணமாக நுரை ஏற்பட்டு, மலைபோல் தேங்கி காற்றில் பறந்து வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கண்மாய் நீரில் கழிவு, ரசாயன நீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

இந்த நுரை மனிதர்கள் மேல் படும்போது, தோலில் எரிச்சல், சொறி போன்றவை ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து, கண்மாய் நீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நுரையை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி சார்பில் வாய்க்கால் ஓரங்களில் பச்சை திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக புகார்

கண்மாய் நீரில் கழிவு நீர் மற்றும் ரசாயன நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நுரையை தடுக்க திரை அமைத்துள்ளது தவறான செயல் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். கண்மாய் நீர் அசுத்தமாவதால், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சினைகளை தீர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

x