நான் போட்டியிடும் தொகுதி இதுதான்! திருமாவளவன் அறிவிப்பு


தொல் திருமாவளவன்

பாஜகவின் எம்எல்ஏக்கள் அதிமுகவினர் வாக்குகளை பெற்று எம்எல்ஏக்கள் ஆகியுள்ளதால் அவர்களை பாஜக எம்எல்ஏக்கள் என்று சொல்வதைவிட அதிமுக எம்எல்ஏக்கள் என்றே சொல்லலாம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். "தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியை உருவாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக கணிசமான பங்களிப்பு செய்துள்ளது. இந்தியா வெல்லும், இந்தியா கூட்டணி வெல்லும் என்கிற அடிப்படையில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற மாநாட்டை அடுத்த மாதம் டிசம்பர் 23-ம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

அகில இந்திய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதிக்காத போதிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலமாக மீண்டும் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது.

சிதம்பரம் வட்டத்திலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் முயற்சியை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த முயற்சியை முற்றிலும் கைவிட வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பணி நிரவல் என்ற பெயரில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பேராசிரியர்கள், பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் எஸ்.சி, எஸ்.டி, பேராசிரியர், பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. அதே நிலை நீடித்தால் அண்ணாமலை பல்கலைக்கழகம் எஸ்.சி, எஸ்.டி பேராசிரியர்கள், பணியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இது சமூகநீதி கருத்தியலுக்கு எதிரானதா அமையும். எனவே பணி நிரவல் நடவடிக்கை மேற்கொள்ளும் பல்கலைக்கழக நிர்வாகம், சமூக நீதியை கருத்தில் கொண்டு திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 17ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடத்த உள்ளோம்.

அண்ணாமலை நடைபயணத்தில் அ.தி.மு.க, பா.ம.க.வை சேர்ந்த தொண்டர்கள் தான் பங்கேற்று வருகின்றனர். அண்ணாமலையோடு நடந்து செல்பவர்கள் பாஜக தொண்டர்கள் இல்லை. தமிழகத்தில் பாஜக எந்த காலத்தில் ஆட்சிக்கு வராது. பாஜகவில் இருக்கும் எம்எல்ஏக்கள் அதிமுகவின் வாக்குகளை பெற்றுத்தான் எம்எல்ஏக்களாகி இருக்கிறார்கள். அதனால் அவர்களை அதிமுக எம்எல்ஏக்கள் என்றே சொல்லலாம்.

தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் வலுவுடன் அதிமுக தான் உள்ளது. அதை மறுக்க முடியாது. அண்ணாமலைக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று அமலாக்கத்துறை விளக்கம் தருமா?

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எனது சொந்த தொகுதி. இந்த தொகுதியை நேசிப்பவன் நான். எனவே சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்" என்று தெரிவித்தார்.

x