தீபாவளி பண்டிகை: சென்னையில் 18,000 போலீஸார் பாதுகாப்பு!


தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் பேட்டி

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி 18000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சுதாகர், பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க்

சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பேசுகையில்," வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் 18,000 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீபாவளிக்கு முந்தைய தினமும், தீபாவளி அன்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.

மேலும்" உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறித்த நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தால் நிச்சயம் வழக்குப் பதிவு செய்யப்படும். பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான இடங்களில் வைத்து வெடிக்க வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக 4000 வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் தற்போது கூடுதலாக 6000 இயக்கப்பட்ட உள்ளது. எனவே இந்த தீபாவளிக்கு மொத்தம் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார்.

வெளியூர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம், கேகே நகர், மாதவரம் , தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுமக்கள் தீபாவளி தினத்தன்று பண்டிகையை கொண்டாடுவதற்காக மால் மற்றும் திரையரங்குகள், கடை வீதிகள் பொருட்களை வாங்குவதற்கு அதிகளவில் செல்வார்கள் என்பதால் அதற்கு ஏற்றாற்போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் சென்னையில் 3 பிரதான இடங்களான பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் என 3 இடங்களில் அதிகளவில் வருகை தருவதால் அங்கும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு முன்பே எங்காவது வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்றால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

ஒரே நேரத்தில் அதிக அளவில் வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவதால் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே மாற்று இடங்களைத் தேர்வு செய்து வாகனங்களை நிறுத்தி வைத்து ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!

அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!

x