இன்று எப்படி மோடியோ அதுபோல ஒரு காலத்தில் பாஜகவின் ஒட்டுமொத்த முகமாக இருந்தவர் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி. இவரது தீவிர இந்துத்துவா முகம் தீவிரவாதிகளையும் அச்சுறுத்தியது. அதனால் தான் மதுரை அருகே அவர் செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு வைத்து அவரைக் கொல்லப் பார்த்தார்கள். நல்ல வேளையாக அந்தக் குண்டு வெடிக்கும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதற்காக அத்வானி தொடங்கிய ரத யாத்திரை பல இடங்களில் பிரளயத்தைக் கிளப்பியது. அதனால் அவரது யாத்திரைக்கு பல மாநிலங்கள் முட்டுக்கட்டை போட்டன. அதனால் ரதயாத்திரையை பாதியில் முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் அத்வானி.
ஆனாலும் தனது முயற்சியில் முழுமூச்சாய் இருந்தார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கரசேவை கலவரத்தின் பின்னணியில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் இருந்தாலும் அடையாளம் தெரிந்த பிரதான முகமாகப் பேசப்பட்டவர் அத்வானி தான்!
இப்படியெல்லாம் எடுத்துக்கொண்ட களப்பணியில் காரியஸ்தராக இருந்த அத்வானிக்கு வாஜ்பாய் காலத்துடன் அரசியல் சோபிக்காமல் போனது. அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிலைப்படுத்தப்பட்ட போது பாஜகவில் சீனியர்கள் பலரும் அதிலிருந்து முரண்பட்டார்கள். அதில் முதன்மையானவர் அத்வானி.
ஆனால், காலம் மோடியை பிரதமராக்கி அத்வானியை அரசியலுக்கு அப்பால் தள்ளிக்கொண்டு போய்விட்டது. தொடக்கமே மோடி - அமித் ஷா கூட்டணியை எதிர்த்த காரணமோ என்னவோ கடந்த ஒன்பது வருட பாஜக ஆட்சியில் அரசியல் அடையாளம் தெரியாத நபராகிப் போனார் அத்வானி. அவரது வயோதிகம் என்று வெளிப்படையாக காரணம் சொல்லப்பட்டாலும் பின்னணியில் அரசியலும் உண்டு
அரசியலில் முகம்காட்டாமல் இருந்தாலும் இன்னும் இளமை துடிப்பு குன்றாமல் இருக்கிறார் அத்வானி. டெல்லியில் எளிமையான வாழ்க்கையைத் தனதாக்கிக் கொண்டிருக்கும் அவருக்கு இன்று 96-வது பிறந்த நாள். அத்வானியை நன்கு அறிந்தவர்கள் அவருக்கு நேரிலும் போனிலும் வாழ்த்துகளை சொல்லி வருகிறார்கள். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பழைய நெருக்கத்தில் அத்வானியை நேரில் சந்தித்து ஆசிபெற்று அவருடன் அளவளாவி இருக்கிறார்.
எக்ஸ் வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ‘‘அத்வானியின் தொலைநோக்கு மிக்க தலைமை தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தியுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் 140 கோடி இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைப் பெற வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.