அமலாக்கத்துறையின் பிடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கியதுமே, அடுத்தது யார் என்ற கேள்விகள் தமிழக அமைச்சர்களை குறிவைத்து எழுந்தன. அவரா இவரா என்ற ஊகங்களில், அண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தியாக இருக்கலாம் என்றும் தடதடக்கின்றன.
முந்தைய ஆட்சிக்காலத்தில் பணி நியமனத்தின் பெயரில் வசூல் வேட்டையாடிய விவகாரத்திலேயே செந்தில் பாலாஜி சிக்கியிருக்கிறார். அவரை மொத்தமாக முடக்கும் முனைப்பில் தற்போதைய திமுக ஆட்சியில், அவர் பொறுப்பு வகித்த மின்வாரியத் துறையின் ஊழல் முறைகேட்டுப் புகார்கள் தூசு தட்டப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் அடுத்து குறிவைக்கப்பட்டிருக்கும் மூர்த்தி உள்ளிட்டவர்களையும், நடப்பு புகார்களை மையமிட்டே வளைக்க முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டம் பரபரக்கிறது. அதற்கு முரசறைந்து முன்னறிவிப்பது போலவே அண்மை நிகழ்வுகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அவற்றில் முதலாவது 2 சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைக்கு ஆளாகியிருப்பது. கணக்கில் வராத பத்திரப்பதிவுகளில் இந்த 2 அலுவலக எல்லைக்குள் மட்டுமே ரூ3000 கோடி அளவுக்கு மறைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. திருவள்ளூர் மற்றும் திருச்சி பதிவு மாவட்டங்களின் தலா ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களை குறிவைத்து, சில தினங்களுக்கு முன்னதாக வருமான வரித்துறையினர் நடத்திய புதிரான சோதனை இந்த புகார்களுக்கு வித்திட்டுள்ளன.
பத்திரப்பதிவு நடைமுறைகளில் குறிப்பிட்ட தொகைக்கு மிகுதியான பதிவு பரிவர்த்தனையின் தரவுகளை, ஆன்லைன் வாயிலாக வருமான வரித்துறை வசம் பதிவுத்துறை அதிகாரிகள் சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த வகையில் ரூ.30 லட்சத்துக்கும் மேலான சொத்துக்களை விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் ஆதார் மற்றும் பான் எண்கள், சொத்தின் தன்மை மற்றும் மதிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை, அந்த நிதியாண்டின் நிறைவாக வருமான வரித்துறை இணையதளத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இந்த வழக்கமான நடைமுறை, கடந்த சில நிதியாண்டுகளாக தற்போது சோதனைக்கு ஆளான 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் விடுபட்டிருக்கிறது. இதனை வருமான வரித்துறையினர் சாதாரணமாக மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கோ அல்லது துறை உயரதிகாரிகளுக்கோ அறிவுறுத்தி கேட்டுப் பெற்றிருக்கலாம். மாறாக ’ஆயுதம் தாங்கிய பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை’ என்ற தோற்றத்தை நிகழ்த்தியிருப்பது, வேறுபல ஐயங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. பத்திரப்பதிவுத்துறை - வருமான வரித்துறை என இருவேறு துறைகளுக்கு மத்தியிலான தகவல் பரிமாற்றத்தில் நிகழும் தடுமாற்றமாக வெளித்தெரியும் இந்த விவகாரத்தை, சோதனை, ஊழல் குற்றச்சாட்டு என்றெல்லாம் மிகைப்படுத்தியதன் பின்னணியில் இந்த ஐயங்கள் புதைந்திருக்கின்றன.
வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் பெரிய விவகாரம் ஏதுமில்லை என பத்திரப்பதிவுத் துறையினர் சமாளித்தாலும், மேற்படி சோதனை நடைபெற்ற சூட்டில் நூற்றுக்கும் மேலான பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், இடமாற்றலில் தூக்கியடிக்கப்பட்டதும் ஐயங்களை அதிகரித்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் வேறு எதையோ தேடி வந்தார்களா அல்லது பெரும் பூகம்ப நடவடிக்கைக்கான முன்னதிர்வுகளை உணர்த்திச் சென்றிருக்கிறார்களா என்ற பீதியும் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் பிடித்தாட்டுகிறது.
பத்திரப்பதிவுத் துறையை வட்டமிடும் இரண்டாவது பரபரப்பு அதன் வழக்கமான, துறை அதிகாரிகளுக்கான இடமாற்றல் நடைமுறைகளை முன்வைத்த மெகா வசூல் குற்றச்சாட்டுகள். நிலத்தின் மதிப்பை நிர்ணயிப்பது, பத்திரம் பதிவு செய்வது, துறை அதிகாரிகள் இடமாற்றம் என்ற இந்த மூன்று உபாயங்களில், பத்திரப்பதிவுத் துறையில் கரன்சி மழை பொழியும். இதில் முதலிரண்டும் பொதுமக்களை பாதிக்கக்கூடியதாகவும், மறுமுனையில் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டத்தினர் ஆதாயம் அடைவதாகவும் இருக்கும். ஆனால் மூன்றாவதான இடமாற்றல் அஸ்திரங்களில், பத்திரப்பதிவுத் துறையின் அதிகாரிகளையே அலறச் செய்யும். விரும்பிய பசையான இடங்களுக்கு டிரான்ஸ்பர் கோருவது மட்டுமன்றி, விரும்பாத இடமாற்றலை தவிர்ப்பதன் பெயரிலும் இந்த லட்சங்கள் இடம்பெயரும்.
இப்படி, துறை அதிகாரிகளை குறிவைத்து பெரும் வசூல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பத்திரப்பதிவுத் துறை திமிலோகப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிரான, பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதான புகாரின் கீழ் நடவடிக்கை பாய்ந்ததுபோல, பத்திரப்பதிவுத் துறையில் அதிகாரிகளின் இடமாற்றலை மையமிட்டு பெரும் வசூல் மேளா நடந்திருப்பதாக சிலர் ஆதாரங்களோடு புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம். இதையொட்டிய நடவடிக்கைகள் விரைவில் பாயலாம் என்றும் பத்திரப்பதிவுத் துறையினர் காதுகடிக்கிறார்கள்.
அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளுக்கான இடமாற்றல் நடைமுறைகளை குறிவைத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் வசூல் வேட்டை செய்வது வெகுகாலமாக நடந்து வருவதுதான். மேசைக்கு கீழே கை நீட்ட வழியில்லாத பள்ளிக்கூட ஆசிரியர்களின் இடமாறுதல்களை குறிவைத்தே பெரும் தொகைகள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் நிலவும்போது, சம்பளத்தைவிட பலமடங்கு கிம்பளம் கொழிக்கும் பத்திரப்பதிவு போன்ற துறைகளின் இடமாற்றல் முறைகேடுகள் வெகு சாதாரணமாக களைகட்டுபவை. ஆட்சி மாறினாலும் மாறாத காட்சியாக நீடிக்கும் இவற்றிலிருந்தே, இம்முறை புதிய பூதத்தை கிளப்ப இருக்கிறார்களாம். இந்தப் புகார்களின் அடிப்படையில், அதிகாரத்தில் வீற்றிருப்பவர்களை வளைப்பதற்கான முகாந்திரங்களை ஆதாரபூர்வமாக மத்திய விசாரணை அமைப்புகள் தோண்டியெடுத்திருப்பதே புதிய பரபரப்புகளுக்கு வித்திட்டிருக்கிறது.
அரசின் கஜனாவை நிரப்புவதில் கனிம வளம் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் முக்கியமானவை. டாஸ்மாக் மூடுவிழா குறித்தான விவாதம் எழும்போதெல்லாம், இந்த 2 துறைகளின் வருவாயை சீரமைத்தாலே அரசுக்கான வருவாய்களை போதிய அளவுக்கு திரட்டிவிடலாம் என்பார்கள். ஆனால் இந்த இரு துறைகளிலும், அரசின் கஜானாவை நிரப்ப வேண்டிய வருவாய், அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளை தஞ்சமடைவது தொடர்ந்து வருகிறது.
அதிலும் கனிம வளத்தைவிட, ஆண்டுதோறும் அரசு நிர்ணயிக்கும் இலக்குகளை அநாயசமாக எட்டக்கூடிய பத்திரப்பதிவுத்துறை, ஊழல் முறைகேடுகள் ஏதுமின்றி செயல்படுவது, சாமானியர்கள் முதல் அரசின் செயல்பாடு வரை அனைத்துக்கும் நன்மை சேர்க்கும். ஆனால் நடப்பதை பார்த்தால் கண்ணுக்கு எட்டியது வரை இந்த துறையில் மாற்றம் விளைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மத்திய விசாரணை அமைப்புகளும், இதனைக் குறிவைத்தே அடுத்த அட்டாக்கை விரைவில் நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
கடந்தாண்டு அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா என்று கேட்டால், மூர்த்தியே பெரிது என்பேன்” என்று அமைச்சருக்கு வாயார புகழாரம் சூட்டினார். இந்த மூர்த்தியின் ரகளையான கீர்த்தியை வெளிப்படுத்தும் விபரீதங்கள் எந்த மூலையிலிருந்து எப்போது வெடிக்கும் என்பதுதான் தற்போதைய கேள்வி!