முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை; அப்டேட் கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!


அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் தான் என்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி அவர் ஓய்வில் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா 2.0 , திட்டங்களை புதுப்பித்து தொடங்கும் நிகழ்வு, தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனகரத்தில் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் மற்றும் திட்ட பயனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இத்திட்டங்களின் கீழ் 18 ஆயிரம் உதவித்தொகை ஐந்து தவணையாக வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் ஏற்பட்ட சிரமங்கள் களைந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கீடான 3 ஆயிரம் விடுவிப்பதில் தாமதமானதால் தமிழ்நாடு அரசின் பங்களிப்பான 15 ஆயிரத்தை விடுவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

இனி, மத்திய அரசின் பங்கீடு வர தாமதமானாலும் தமிழ்நாடு அரசின் பங்களிப்பான 15 ஆயிரத்தை முதலில் பயனாளிகளுக்கு வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இனி உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், முதல் குழந்தையாக இருந்தாலும் இரண்டாம் குழந்தையாக இருந்தாலும் 18 ஆயிரம் முழுவதும் வழங்கப்படும். இதுவரை 10,529 கோடி மதிப்பீட்டில் 1.16 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தற்போது 44 லட்சம் மதிப்பீட்டில் 1,06,766 பேர் புதிதாக பயனடைய உள்ளனர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டு முதல் விடப்பட்ட பயனாளிகள் கணக்கெடுத்து, உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்றார்.

மேலும், உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் துணை சுகாதார அலுவலகத்தில் அல்லது 104 என்ற எண்ணில் முறையிடலாம் என தெரிவித்த அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவ ஓய்வில் இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ப்ளு வகையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். நலமுடன் உள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

x