`எனக்கு எதிராக கணவர் சதி'- விவாகரத்து கேட்டு முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு!


கணவர் சண்முகத்துடன் சந்திரபிரியங்கா

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா, கடந்த அக்.10-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ``தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்குள்ளாகி வந்த நிலையில், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து ராஜினாமா செய்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்காவின் துறை ரீதியான செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதால், அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வர் முடிவு செய்து இருந்ததை தெரிந்து கொண்டு அவராக ராஜினாமா செய்துள்ளார் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

சந்திர பிரியங்கா

அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், கருத்துக்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் தனது கணவர் சண்முகத்தின் மூலம் தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், தமக்கு எதிரான சதி வேலைகள் நடப்பதாகவும் புதுச்சேரி டிஜிபி சீனிவாசனிடம் புகார் அளித்திருந்தார் சந்திர பிரியங்கா. இதையடுத்து காரைக்கால் மாவட்ட போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே தமது கணவர் சண்முகத்திடமிருந்து விவாகரத்து கோரி காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் சந்திர பிரியங்கா நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர், "எனக்கு கொலை மிரட்டல் உள்ளது. எனக்கு எதிராக சில சதி வேலைகள் நடப்பதாக உணர்கிறேன். கணவர் மூலமாக இவை நடப்பதாக தெரிகிறது.

அமைச்சராக இருந்தபோது

இது குறித்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இனிமேலும் சரிப்பட்டு வராது என்பதால் விவாகரத்து கோரி காரைக்கால் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளேன்" என்றார். முன்னாள் அமைச்சரின் இந்த செயல் அவரது இரண்டாவது திருமணத்தை நோக்கிய பயணம் என்று காரைக்கால் அரசியலில் பரபரப்பாக பேசுகிறார்கள்.

x