சசிகலா இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார்; உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பான விவாதம்!


வி.கே.சசிகலா

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்ஜின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இடைக்கால பொதுச்செயலாளராக வி.கே சசிகலாவும் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகனும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதன் பிறகு ஊழல் வழக்கில் சசிகலா சிறைசென்று விட்டதால் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவையும் தினகரனையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கியது. அத்துடன், பொதுச்செயலாளர் பதவிக்குப் பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தன்னை கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியது தொடர்பான பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். ஆனால். அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.

வி.கே.சசிகலா

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாம் நாளான இன்று நடைபெற்ற விசாரணையின்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன், “கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்தக் கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக தங்களைச் தேர்வு செய்துகொண்டனர்” என தெரிவித்தார்.

தொடர்ந்து வாதிட்ட அவர், “முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட சசிகலா எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர் தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “அதிமுக பொதுக்குழு விதிகளின்படி நடைபெற்ற பொதுக்குழு என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின் படியே சசிகலா நீக்கம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

சனாதனம் குறித்து நான் பேசியது தவறில்லை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ... கொந்தளித்த அமிதாப் பச்சன்!

x