மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக வென்றால் அங்கு முதல்வர் பதவி மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் 17 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இங்கு மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. சிவ்ராஜ் சின் சவுகான் முதல்வராக உள்ளார். மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போது தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் மாநிலமாக மத்திய பிரதேசம் தான் உள்ளது. இரண்டு கட்சிகளும் சமமான பலத்தில் இருப்பதால் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது முடிவு செய்யப்பட முடியாத நிலையில் உள்ளது.
இதற்கிடையே தான் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி வழங்கப்படாது எனவும், மாறாக வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிவ்ராஜ் சிங் சவுகான் தரப்பு அதிருப்தியில் உள்ளது.
அங்கு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. கடந்த 2018 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்தார்.
இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக அரியணை ஏறியது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார். ஜோதிர் ஆதித்ய சிந்தியா மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் அவருக்கு மாநில முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் பரவுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ''சிந்தியாவின் குடும்பம் முதல்வர் பதவிக்கான ரேஸில் இல்லை" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அரசியலை பொறுத்தமட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ஒருவேளை மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக வென்றால் பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டுத்தான் ஆக நேரிடும்.
இதையும் வாசிக்கலாமே...