அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் 


அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரம் கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். உடன் ஆட்சியர் பொ.ரத்தினசாமி, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் அமைச்சர் சிவசங்கர் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, சிங்கராயபுரம் கிராமத்தில் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காடுவெட்டாங்குறிச்சி முதல் சிங்கராயபுரம் வரையிலான சாலை மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நல்லனம் கிராமத்தில் ரூ.78.78 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி, உட்கோட்டை கிராமத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, கல்லூர் கிராமத்தில் ரூ.1.26 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார் அமைச்சர்.

மேலும் இன்று, ரெட்டிதத்தூர் கிராமத்தில் ரூ.2.29 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, அழகாபுரம் கிராமத்தில் ரூ.2.24 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, அய்யூர் கிராமத்தில் ரூ.47.70 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிகளில் அந்தந்த கிராம உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

x