தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனக்கூறி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்தை வியாபாரிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் நவ.12-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. சமீப காலமாக, உரிய அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைப்பதால் வெடி விபத்துகள் அதிகளவில் நடந்தன. இதனைக் கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு உரிமமும் இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி இல்லத்தின் முன்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் அனுமதி மறுத்தால் அமைச்சர் உதயநிதியை சந்தித்து முறையிட வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் இல்லம் முன்பு திரண்ட வியாபாரிகளிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் வாசிக்கலாமே...