[X] Close
 

ஆர்.எஸ்.பாரதி ப்யூன்! – வேலுமணி தாக்கு


spvelumani-rsbharathi

ஆர்.எஸ்.பாரதி - எஸ்.பி.வேலுமணி

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 19:47 pm
  • அ+ அ-

ஆர்.எஸ்.பாரதி ப்யூன். அவர் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என திமுக குற்றம் சாட்டி உள்ளது. மேலும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கலைக்கவேண்டும் எனத் திட்டமிட்டு காரியங்களைச் செய்து வருகிறார் ஸ்டாலின். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி தொடரும்.

மேலும் திமுக ஆட்சியில் ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் பணியாற்றியதை விட, பத்துமடங்கு அதிகமாகவே சிறப்பாகச் செயல்பட்டுவருகிறேன். நான் ஊழல் எதுவும் செய்யவில்லை.

ஸ்டாலின் சொன்னது போல், நான் ராஜினாமா செய்யத் தயார். அதேசமயம், ஸ்டாலின் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் திமுக தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யட்டும். திமுக தலைவர் பதவியை அவரது சகோதரர் அழகிரிக்குக் கொடுக்கட்டும். பிறகு ஊழல் வழக்கில் நிரூபணமானால், நான் அரசியலை விட்டே விலகிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் வேலுமணிக்கு தைரியமிருந்தால், ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ஊழலை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அமைச்சர் வேலுமணிக்குத் தைரியம் இருந்தால், அவரே ஓரிடத்தைத் தேர்வு செய்யட்டும். அங்கே ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார். அவர் தயாரா? என்று கேட்டிருந்தார்.

கோவை விமான நிலையத்தில், அமைச்சர் வேலுமணி நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஏற்கெனவே ஸ்டாலின் சொன்னதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன். ஸ்டாலின் ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்கிறேன். மற்றபடி ஆர்.எஸ்.பாரதி என்பவர், ப்யூன். ஸ்டாலின் புகார் கொடுக்கச் சொன்னால் கொடுப்பார். வேண்டாம் என்றால் கொடுக்காமல் இருப்பார். இப்படி ப்யூன் வேலை பார்ப்பவர்தான் ஆர்.எஸ்.பாரதி. அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமென்று அவசியமில்லை. இதற்கு பதில் சொல்ல, எங்கள் கட்சியில் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

[X] Close