கரூரை சவக்குழியில் தள்ளிய ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது... ரத்தத்தில் கடிதம் எழுதி எதிர்ப்பை காட்டிய வட்டார தலைவர்!


ஜோதிமணி

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணிக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி உள்ள சம்பவம் அந்தக் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதி எம்பி-யாக தற்போது காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி பதவி வகித்து வருகிறார். கரூர் காங்கிரசுக்குள் இவருக்கு எதிர்கோஷ்டியும் உண்டு. இருந்தாலும் செந்தில் பாலாஜி தயவில் இத்தனை நாளும் சிக்கலில்லாமல் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தார் ஜோதிமணி. இப்போது செந்தில் பாலாலி சிறைக்குள் இருப்பதால் திமுகவின் பிற நிர்வாகிகள் ஜோதிமணியை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. இதனால் இம்முறை கரூரை விட்டுவிட்டு திண்டுக்கல்லுக்குப் போய்விடலாமா என யோசனையில் ஜோதிமணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வட்டார தலைவரின் ரத்தக் கடிதம்...

இந்த நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தான்தோன்றி மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஜோதிமணி ஆதரவில் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பதவி விலகிய சின்னசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு மாற்றாக மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியம்

இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும் முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பேங்க் சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார்.

கரூரில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, ‘கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், சொந்த கட்சியினருடன் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தினாலும் அவருக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு உள்ளது.

மேலும் கூட்டணி கட்சிகளிடமும் வெறுப்புணர்வை அவரது செயல் ஏற்படுத்தியுள்ளது. தொகுதி முழுவதும் அவருக்கு எதிரான நிலை உள்ளது. எனவே, ஜோதிமணிக்கு கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார துணைத்தலைவர் செந்தில்குமார் என்பவர், தனது ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதி தலைமைக்கு அனுப்புமாறு கூட்டத்தில் ஒப்படைத்தார். அதில், ‘கரூர் தொகுதியை ஜோதிமணி சவக்குழியில் தள்ளி முடக்கி விட்டார் எனவும், எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது’ தனது ரத்தத்தால் எழுதி இருந்தார் செந்தில்குமார். அவருக்கு மாற்றாக, பழையபடி பேங்க் சுப்பிரமணியத்திற்கே சீட் வழங்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார் செந்தில்குமார்.

ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் எம்பி-யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என கடந்த வாரம் சிவகங்கை காங்கிரஸார் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த நிலையில், ஜோதிமணிக்கு எதிராகவும் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x