129 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் பீகார் முதல்வர்!


நிதிஷ்குமார்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் 129 வாக்குகள் பெற்று தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதிஷ்குமார்.

பீகார் சட்டமன்றம்

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டார். அத்துடன் ராஷ்டிரிய ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அவர்கள் ஆதரவுடன் புதிய அரசையும் அமைத்தார். ராஷ்ட்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும், நிதீஷ்குமார் முதல்வராகவும் பதவி வகித்தனர்.

அத்துடன் பாஜக மீதான கடுப்பில் இந்திய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி இந்தியா கூட்டணியை அமைத்தார் நிதீஷ் குமார். அவரது ஒருங்கிணைப்பில் ஒன்று திரண்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் அந்த கூட்டணியை விட்டு திடீரென வெளியேறியதுடன் மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்தார்.

நிதிஷ்குமார்

இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறையாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் 3-வது முறையாக பதவியேற்றார். இந்த சூழலில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதையடுத்து பீகார் சட்டசபையில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 129 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வாக்குகள் நிதிஷ்குமார் அரசுக்கு கிடைத்தது. அதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் வெற்றி பெற்றார். இந்த வாக்கெடுப்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மூன்று பேர் ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பாஜக (75 எம்எல்ஏக்கள்), ஐக்கிய ஜனதா தளம் (44 எம்எல்ஏக்கள்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா(4 எம்எல்ஏக்கள்), ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் நீலம் தேவி, சேத்தன் ஆனந்த்,பிரகலாத் யாதவ் ஆகிய 3 பேரும் என்டிஏ கூட்டணிக்கு மாறினர். சுயேச்சை எம்எல்ஏவும், அமைச்சருமான சுமித்குமார் சிங் உள்பட மொத்தம் 129 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.

ஆர்ஜேடி-யில் 79 எம்எல்ஏக்களும், காங்கிரஸின் 19 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வந்திருந்தனர். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

x