ஆண்டவருக்கு அரசியலிலும் தகையுமா ‘தக் லைஃப்’?


கமல் ஹாசன்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்புகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கட்டமைத்த கமல் ஹாசன், தற்போது ஒற்றை சீட்டு பேரத்துக்காக திமுக கூட்டணியில் கடைசி வாய்ப்பாக வரிசையில் காத்திருக்கிறார்.

எப்பாடுபட்டேனும் நாடாளுமன்றத்தில் தனது குரல் ஒலிக்க வேண்டும்; தமிழகத்தில் மநீம கட்சிக்கு புத்துயிர் தர வேண்டும் என்பது கமலின் தற்போதைய தவிப்பாக நீடிக்கிறது. மணி ரத்னம் இயக்கத்தில் ’தக் லைஃப்’ திரைப்படத்தில் மும்முரமாக நடித்தபடியே, அரசிலிலும் தனக்கான ’தக் லைஃப்’ சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார். ஆண்டவரின் அரசியல் தக் லைஃப் தகையுமா?

கமல் நடிக்கும் ’தக் லைஃப்’

எதிர்ப்பார்ப்பும் ஏமாற்றமும்

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில், வெற்றிடத்தை நிரப்ப புறப்பட்ட கட்சிகளின் மத்தியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஊழலுக்கு எதிர்ப்பு, திராவிட கட்சிகளுக்கு மாற்று என மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர் போல கமல் பரபரப்பை கிளப்பினார்.

தனக்கான ரசிகர் படை மற்றும் வசீகரத்துக்கான வாக்குகள் ஆகியவற்றுக்கு அப்பால், திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க மறுக்கும் தமிழகத்தின் நிரந்தர வாக்குவங்கியை கமல் வளைத்துப்போடுவார் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பின. பிராந்திய அளவில் அவர் தொடங்கிய கட்சி, கமலின் சினிமா பின்புலம் காரணமாக தேசிய அளவிலும் பேசப்பட்டது. ஆனால் கமல் ரசிகர்கள் எதிர்பார்த்த எதுவுமே கடைசியில் பெயரவில்லை.

கோவை மநீம கூட்டத்தில் கமல்

தலா ஒரு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கடந்த போதும், மநீம கட்சி மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நடிப்பின் சிகரமாக கமலின் உழைப்பைக் கொட்டி உருவாகும் பெரும்பாலான திரைப்படங்கள், விமர்சகர்களுக்கு அப்பால் வெகுஜனத்திரள் மத்தியில் வரவேற்பு பெறாதுபோகும். அந்த சோகம் அவரது கட்சிக்கும் கடைசியில் நேர்ந்திருக்கிறது.

நகரங்களுக்கு அப்பால் அடுத்தகட்ட அளவில் கட்சியை கட்டமைக்கவே கமல் தடுமாறி வருகிறார். கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் கோட்டைகளை தகர்ப்பது அத்தனை சுலபமில்லை என்பதையும் லேட்டாகவே உணர்ந்திருக்கிறார்.

ஆண்டவரின் அந்தர் பல்டி

அரசியல் யதார்த்தத்தை உணர்ந்த கமல், தனியாவர்த்தனத்துக்கு முடிவு கட்டி தனது அலைவரிசையுடன் ஒத்துப்போகும் பிரதான கட்சியாக திமுக பக்கம் சாய முடிவு செய்தார். அதற்கு முன்பாகவே மய்யத்தின் சிறிதும் பெரிதுமான நிர்வாகிகள் பலர் அங்கிருந்து கழன்று திமுகவில் ஐக்கியமானார்கள். சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த ஊடாட்டங்களில் ஸ்டாலின் மற்றும் உதயநிதியுடன் கமல் நெருக்கம் பாராட்ட ஆரம்பித்தார்.

இதனால் திமுகவின் எதிர்முகாமான அதிமுகவின் அர்ச்சனைக்கும் கமல் ஆளானார். “நடிகர் கமல்ஹாசனை நாங்கள் ஓர் அரசியல் தலைவராகவே பார்க்கவில்லை. திமுக தயவில் எம்பி-யாக முயலும் அவர், பச்சோந்தியைவிட வேகமாக நிறம் மாறக் கூடியவர். அவர் கட்சியில் இப்போது அவர் மட்டுமே இருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமியும், “ஒற்றை எம்பி சீட்டுக்காக வாயை வாடகைக்கு விடுபவர்” என்று செல்லூர் ராஜூவும் கமலை வறுத்தெடுத்தார்கள்.

கமலின் அரசியல் நகர்வுகளும் அவ்வாறே அமைந்திருந்தன. கட்சி ஆரம்பித்த புதிதில் ’ஊழல் பொதிமூட்டை, நேர்மை என்பதை உச்சரிக்கவே தகுதியற்றவர்கள்’ என்றெல்லாம் திமுகவை வசைபாடினார் கமல். அவரே பின்னர், சென்னை வெள்ளப் பேரிடர் காலத்தில் திமுக ஆட்சிக்கு வரிந்துகொண்டு, பரிந்து பேசியதில் பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளானார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பேராதரவை வழங்கியபோதே, எம்பி சீட்டுக்கு ஆண்டவர் அடிபோடுகிறார் என்று சமூக ஊடகங்களில் சீண்டினார்கள். ஆனால், திமுக தலைமையுடன் நெருக்கம் வளர்த்திருக்கும் கமலுக்கு இது வரை கிடைத்திருப்பது என்னவோ ஏமாற்றம்தான்.

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் கமல்

பிடி கொடுக்காத திமுக

கமலின் உள்ளக்கிடக்கையை உணர்ந்திருக்கும் திமுக தலைமையும், நடக்கவிருப்பது மக்களவைத் தேர்தல் என்பதால் கூட்டணி பங்கீட்டில் கறார் காட்டவே செய்கிறது. தேர்தலுக்கு அப்பாலும் கொள்கை கூட்டணியாக நீடிக்கும் திமுக தலைமையிலான நடப்புக் கூட்டணியின் தலைவர்களிடம், கமலுக்காக அதிருப்தி சம்பாதிக்க திமுக தலைமைக்கு விருப்பமில்லை.

திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், மநீம கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறுவதை ரசிக்கவில்லை. திமுகவின் அடுத்த கட்டத் தலைவர்களோடும் நல்ல நெருக்கம் பாராட்டும் கூட்டணியின் இதர கட்சித் தலைவர்கள் வரிசையில் கமலால் அதனை பேண இயலவில்லை. அவரது சுபாவமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தனது அரசியல் மீட்சிக்காக திமுகவை அண்டி வருபவர், காரியம் சாதித்ததும் எதிர்க்கவும் துணிவார் என்பதே திமுக இரண்டாம் கட்டத் தலைவர்களின் கணிப்பாக இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் என்றால் தேசியக் கட்சிக்கு, சட்டப்பேரவை தேர்தல் என்றால் பிராந்தியக் கட்சிக்கு என்ற அடிப்படையில் தான் தமிழக அரசியலில் கூட்டணி பங்கீட்டின் ஒதுக்கீடு தீர்மானிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுப்பதிலும் திமுக தயக்கம் காட்டுகிறது. இந்த வகையில் காங்கிரஸ் டெல்லி தலைமை வாயிலாக அழுத்தம் கொடுக்க முயன்ற கமலுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

கேட்பது மூன்று; கிடைக்குமா ஒன்று?

இந்த அறிபறியின் மத்தியில் கோவை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளை குறிவைத்து திமுகவை மய்யம் நெருக்கி வருகிறது. பெயருக்கு இன்னொரு தொகுதியையும் சேர்த்து மூன்றுடன் பேரத்தை தொடங்கிய மய்யம், ‘2 லட்சியம் 1 நிச்சயம்’ என நம்பியிருக்கிறது. அது சாத்தியமாகும் வரை கூட்டணியை பகிரங்கமாக அறிவிக்கவும் தயங்கி வருகிறது.

கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினருடன் கமல்

கமல் என்ற ஒற்றை வசீகரம் தேர்தல் பிரச்சார மேடைகளில் திமுக கூட்டணிக்கு வெகுவாக கூட்டம் சேர்க்கும்; வாக்குகளை கவரவும் செய்யும். என்றாலும், அதற்காக எம்பி பங்கீட்டில் விலைகொடுக்க திமுக தயாராக இல்லை. ’சட்டப்பேரவை தேர்தலில் தாராளம் உண்டு’ என்ற திமுகவின் பேரத்தில் கமலுக்கு உடன்பாடில்லை. இறுதியாக கோவை இல்லாவிட்டாலும் தென் சென்னையாவது தனக்கு வேண்டும் என நினைக்கிறார் கமல்.

’தக் லைஃப்’ சவால்கள்

சினிமா மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் நடைமுறை எதார்த்தத்தை உள்வாங்குவதில் கமல் வித்தகர். அரசியலிலும் அதுவே தொடர இருக்கிறது. விஜய் விஸ்வரூபமெடுப்பதற்கு முன்னர், டெல்லியிலிருந்து எதிரொலிக்கும் தனது கர்ஜனை மூலமாக தமிழகத்திலும் கட்சியை வளர்த்தெடுக்க கமல் விரும்புகிறார். 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னரும் மய்யத்தின் தனியாவர்த்தனத்துக்கு வாய்ப்பில்லாது போகுமெனில், காங்கிரஸில் கட்சியை கரைக்கவும் கமல் தயங்கமாட்டார் என்கிறார்கள்.

கமல் ஹாசன்

தனது எதிர்காலத்துடன் தொடர்புடையதாக காங்கிரஸை கருதுகிறார் கமல். ஆனால், தமிழக அளவில் திமுக தயவில் மட்டுமே காங்கிரஸ் தழைத்திருப்பதால் நேரிடையாக திமுகவுடன் உறவு பேணவே தற்போதைக்கு விரும்புகிறார். அரசியலில், மறந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி போன்று சூடு போட்டுக்கொள்ள கமல் விரும்பவில்லை. அதற்கான நிதானத்துடன் அடுத்த இன்னிங்ஸ் அரசியலில் ’தக் லைஃப்’ சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிறார் ஆண்டவர்!

x