வரும் மக்களவைத் தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 370 இடங்களைக் கைப்பற்ற, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 வாக்குகளைக் கூடுதலாகப் பெறுவதை கட்சியினர் உறுதி செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பாஜகவின் தாமரைச் சின்னம் 370 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஜபுவாவிற்கு நான் வரவில்லை. ஆனால் சேவக் என்ற முறையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கவே வந்துள்ளேன்" என்று கூறினார்.
முன்னதாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.