``கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசே தரலாம்'' என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறார்கள். அது குறித்து திமுகவினர் வீடு வீடாக சென்று அம்பலப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று தரிசனம் செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் "தமிழக அரசின் பொது நிறுவனங்கள் குழு சார்பில் பல்வேறு பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருச்சியில் இந்த ஆய்வு நடைபெற்றது.
இன்று புதுக்கோட்டையில் ஆய்வு நடைபெற உள்ளது. திமுக அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்" என்று கூறினர்.
அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, "கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம். திமுகவின் குணமே அதுதான், கள்ள உறவு என்பது திமுகவுக்கு கைவந்த கலை" என்று கூறினார். மேலும் "பாஜக கூட்டணி விவகாரத்தில் அதிமுக உறுதியாக உள்ளது. இது குறித்து ஏற்கெனவே பொதுச்செயலாளர் தெளிவுபடுத்திவிட்டார். சசிகலா விவகாரத்தில நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்று பார்ப்போம். நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்துமே எங்களுக்கு சாதகமாக இருக்கும். அதேபோன்று அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தற்போது திறந்து வைக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை" என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "திருச்சியில் உள்ள காகித தொழிற்சாலை, அதிமுக ஆட்சி காலத்தில் 22 மாதங்களில் தொடங்கப்பட்ட திட்டம். அந்த திட்டம் தான் இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சிஎஸ்ஆர் நிதி உள்ளது. இது தற்போது கரூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனை பிரித்து திருச்சி மாவட்டத்திற்கு இந்த நிதியை ஒதுக்கி செயல்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.