நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் ராமர் கோயில் தான் என்று காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. அதையடுத்து அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதை பாஜக அரசு தனது சாதனைகளில் ஒன்றாக கருதுகிறது.
இந்நிலையில் தற்போதைய அரசின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் ராமர் கோயில் கட்டியதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி, பிரமோத் திவாரி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.
"ராமர் கோயிலில் இந்து மரபுகளின்படி மூலவர் பிரதிஷ்டை நடைபெறவில்லை. கோயில் கட்டுமானம் முழுமையடைவதற்கு முன்பு பிரதிஷ்டை நடந்ததால் நாட்டுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் இதுதான். அதனாலேயே டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராமரைத் தேர்தல் வாக்களிக்கும் பெட்டியில் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று பிரமோத் திவாரி பேசிள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.