ரூ1,300 கோடி... தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக குவித்த நன்கொடை; காங்கிரஸ் கட்சியைவிட 7 மடங்கு அதிகம்


தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை

கடந்த நிதியாண்டின் நன்கொடையாக, தேர்தல் பத்திரங்கள் மூலமாக மட்டும் பாஜக ரூ1,300 கோடி குவித்துள்ளது. இத்தொகை காங்கிரஸ் பெற்றதை விட சுமார் 7 மடங்குக்கும் சற்று அதிகமாகும்.

தேசம் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் தருணத்தில் கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன. ஆளும்கட்சியான பாஜக இதில் முன்னிலை வகிக்கும் என்று சொல்லப்படுவதன் மத்தியில், கடந்த நிதியாண்டில் அக்கட்சி பெற்ற நன்கொடை மொத்தம் ரூ.2,120 கோடி என தெரிய வந்துள்ளது.

பாஜக - காங்கிரஸ்

தேர்தல் பத்திரங்கள் மூலமாக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் நடைமுறை 5 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகமானது. எஸ்பிஐ வங்கி வெளியிடும் தேர்தல் நிதிப் பத்திரங்களைப் பெற்று, அவற்றை அரசியல் கட்சிகளின் கணக்கில் செலுத்தும் நடைமுறையும், அப்போது முதல் வழக்கில் உள்ளது.அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையை முறைப்படுத்தும் முயற்சி என்ற பெயரிலான இந்த நடவடிக்கை மீது விமர்சனங்களும் எழுந்தன.

இவற்றின் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ஆண்டு தோறும் தேர்தல் நன்கொடைகளை தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அதிகம் பெற்று வந்தது சர்ச்சையானது. பலதரப்பிலும் இருந்து ஆளும் கட்சிக்கு நன்கொடை அதிகரிப்பது வழக்கம் என்ற போதும், அவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற புகார்களும் அதிகரித்து இருந்தன. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணயத்திடம் அரசியல் கட்சிகள் ஒப்படைக்கும் வருடாந்திர வரவு மற்றும் செலவு கணக்கு விவரங்களில், பாஜக பல மடங்கு அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றது தெரிய வந்தது.

தேர்தல் நன்கொடை

கடந்த நிதியாண்டில் பாஜக ரூ2,120 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் ரூ1,300 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக சேர்ந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ171 கோடியுடன் ஒப்பிடுகையில் 7 மடங்குக்கும் சற்று அதிகமாகும். தனிப்பட்ட வகையில் முந்தைய நிதியாண்டு காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ236 கோடியை விட இது குறைவாகும்.

இவை அனைத்தும் கடந்த நிதியாண்டின் நன்கொடை விவரங்களாகும். தற்போது அடுத்த பொதுத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருவதால், கடந்தாண்டைவிட அதிகமாக இந்த நிதியாண்டில் அவை நன்கொடைகளை பெற்றிருக்கும் எனத் தெரிய வருகிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் காரணமாக, அதற்கான நகொடைகள் உச்சம் தொடும் எனவும் கணிக்கப்படுகிறது.

x