டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது: கவிஞர் வைரமுத்து!


சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா

டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, இனி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சஙகரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிதுரை அனுப்பியது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து காலம்தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

என்.சங்கரய்யா

ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொள்ள வந்த ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், இவ்விழாவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி புறக்கணித்து, தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். 15 சிண்டிகேட் உறுப்பினர்கள், 2 பேராசிரியர்களும் விழாவை புறக்கணித்திருந்தனர்.

கவிஞர் பாடலாசிரியர் வைரமுத்து

இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ”டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது. இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும் பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால் புறக்கணிக்க வேண்டும்.

பெயருக்கு முன்னால் அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தை விடத் தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது. கொள்கை பேசிப் பேசிச் சிவந்த வாய் அவருடையது. இனி இந்த வாடிப்போன வெற்றிலையாலா வாய்சிவக்கப் போகிறது?” எனப் பதிவிட்டுள்ளார்.

x