தமிழகத்தில் ஒரே நாளில் 80 இடங்களில் ஐ.டி அதிரடி ரெய்டு: பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கலக்கம்!


சென்னை வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் கமலேஷ் ஜெயின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலு

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் இன்று காலை முதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படை உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எ.வ.வேலுவுக்குச் சொந்தமான அருணை கல்லூரி, சென்னையில் அண்ணாநகர், அடையாறு, புரசைவாக்கம், வேப்பேரி, தி.நகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக மணல் குவாரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக மணல் குவாரி அனுமதி வழங்காமல் அளவுக்கு அதிகமான மணல் எடுப்பதாக இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்பு உடைய இடங்கள் மற்றும் பிரபல கட்டுமான நிறுவன தொடர்புடைய இடங்களில் இன்று காலை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை

திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுக்குச் சொந்தமான அருணை கல்லூரி, அவரது வீடு, அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் அலுவலகம், அவரது உறவினர்கள் வீடு அலுவலகங்கள், இதே போல் சென்னை அடையாறில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் தொடர்புடைய தலைமை அலுவலகம், உரிமையாளர்கள் வீடு , வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் கமலேஷ் ஜெயின் வீடு, புரைவாக்கத்தில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் அமீத் வீடு அலுவலகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு என 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி ரசீதை காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது.

இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்கிய கட்டுமான நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவன அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்த சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x