அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி கேட்டு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் மதுக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நவம்பர் 2-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், கேஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவர் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு கேஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.