டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு விட்ட சிரோமணி அகாலி தளம் கட்சி தற்போது மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பஞ்சாபில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததால் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட உள்ளன.
இதற்கிடையில், பஞ்சாப்பின் சிரோமணி அகாலி தளம், தனது பழைய கூட்டாளியான பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தற்போது அதே கூட்டணிக்கு திரும்பியது. அந்த வரிசையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், உத்தரப் பிரதேசத்தில் ஆர்எல்டி கட்சியும் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது சிரோமணி அகாலி தளம், பழைய பார்முலாவை பயன்படுத்தி பாஜகவுடன் கைகோர்க்கிறது.
பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் எட்டில் போட்டியிட விரும்புவதாகவும், பாஜகவுக்கு 5 இடங்களைக் கொடுக்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த பஞ்சாப்பில் 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தன. அதனால் இப்போது மீண்டும் கூட்டணி அமைக்க இருகட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், வரும் 12, 13-ம் தேதிகளில் டெல்லி செல்லவுள்ளதாகவும், அப்போது பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்து கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவுடனான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சிரோமணி அகாலி தளம் இன்னும் வெளியிடவில்லை.