தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி எம்எல்சி-யுமான பட்டினம் மகேந்தர் ரெட்டி தனது மனைவி மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் நாளை காங்கிரஸில் இணைகிறார்.
காங்கிரஸில் இணைவது தொடர்பாக நாளை (சனிக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மகேந்தர் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் சந்திக்க உள்ளனர். ரெட்டியுடன் தந்தூர் நகராட்சித் தலைவர் தட்டிகொண்டா ஸ்வப்னா, பிஆர்எஸ் மூத்த தலைவர்கள் ரவி கவுட் மற்றும் கரணம் புருஷோத்தமராவ் உள்ளிட்டவர்களும் நாளை கார்கேவை சந்திக்கிறார்கள்.
முன்னதாக, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த வியாழக்கிழமை மகேந்தர் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே பட்டினம் மகேந்தர் ரெட்டியும் அவரது மனைவியும் காங்கிரஸில் சேரவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அந்த சமயத்தில் அப்போதைய தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வீடு தேடிச் சென்று ரெட்டியைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு ரெட்டியை அமைச்சரவையில் சேர்த்து அவரைச் சமாதானப்படுத்தினார்.
இந்த நிலையில், மகேந்தர் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் பி ஆர்எஸ் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸில் இணைகிறார்கள் இருப்பினும், மகேந்தர் ரெட்டியின் சகோதரரும், கோடங்கல் முன்னாள் எம்எல்ஏ-வுமான பட்டினம் நரேந்தர் ரெட்டி, அண்ணங் எங்கு போனாலும் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் பிஆர்எஸ் கட்சியில் தொடருவேன்” என்று தெரிவித்துள்ளார்.