தெலங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் சார்மினார் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி பரிசீலித்து வருகிறது.
தெலங்கானா உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி பரிசீலித்து வருகிறது. இந்தப் பின்னணியில் சார்மினார் சட்டமன்றத் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்த அந்த கட்சி பரிசீலித்து வருகிறது.
எதிர்காலத்தில் பெண்களுக்கு ஹைதராபாத் தொகுதியில் இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஏஐஎம்ஐஎம் ஆலோசித்து வருகிறது.
ஹைதராபாத் மக்களவைத் தொகுதி இறுதியில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அங்கே பெண் வேட்பாளரை நிறுத்த ஏஐஎம்ஐஎம் வாய்ப்பளிக்கும். அதுகுறித்து கட்சியின் தலைமை குறிப்பாக ஓவைசி சகோதரர்கள், பெண் வேட்பாளர் தொடர்பாக விவாதித்ததாகவும், வேட்பாளரை அறிவிப்பதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
குறிப்பாக, சார்மினார் சட்டமன்றத் தொகுதியில் பெண் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான வியூகத்தை வகுக்கும் பணி தொடங்கி விட்டதாகவும், கட்சிக்குள் பணியாற்றுவது மட்டுமின்றி சமூகத்துக்கும் பங்களிப்பு செய்த நபர்களை கட்சித் தலைவர்கள் மதிப்பீடு செய்து வருவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.