சரத்குமாருக்கும் சாய்ஸ்; அதிமுக பக்கம் சாய்வாரா... பாஜக பக்கம் பாய்வாரா?


சரத்குமார்

பாஜக கூட்டணியில் சரத்குமார் இணையலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் அவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் அவ்வப்போது தங்கள் கட்சியின் இருப்பைக் காட்டும் வகையில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்துவது வழக்கம். மற்றபடி தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவதில்லை. இப்போது மக்களவைத் தேர்தலை ஒட்டி அவரது கட்சிக்கும் கிராக்கி வந்திருக்கிறது.

அண்மைக்காலமாக சரத் தனது பேட்டிகளில், மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறார். அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை ஆதரித்தும் அவர் பேசினார். அதனால் அவர் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக பேச்சுக்கள் கிளம்பின.

ஆனால், இது தொடர்பாக பாஜக தரப்பில் அவருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதனால் அந்த இடத்தை அதிமுக பிடித்துக் கொண்டிருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு வலுவான கூட்டணி அமையாததால் அனைவருக்கும் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறது அதிமுக.

சிறிய கட்சிகள் மட்டுமின்றி வலுவான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளிடமும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்தவகையில், அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் சரத்குமாரையும் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா காலத்தில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. அதன் பிறகு திடீரென அதிமுகவை விட்டு விலகியது. இப்போது மீண்டும் கூட்டணிக்குள் சமக-வை கொண்டுவர அதிமுக களமிறங்கியுள்ளது. இதையடுத்து சரத்குமார், அதிமுக பக்கம் சாய்வாரா பாஜக பக்கம் பாய்வாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

x