411 எம்எல்ஏக்களை இழுத்துள்ளது பாஜக... காங்கிரஸ் தலைவர் சொல்லும் பகீர் கணக்கு!


மல்லிகார்ஜுன கார்கே

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து 411 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவால் இழுக்கப்பட்டு கட்சி மாறியுள்ளார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

2014 ம் ஆண்டு மத்தியில் பாஜக பதவியேற்ற பின்னர் பாஜக ஆளாத மாநிலங்களில் நடைபெறும் அரசுகளை சீர்குலைப்பதை பாஜக தொடர்ந்து திட்டமிட்டு செய்து வருகிறது. ஆளும் கட்சிகள் அல்லது ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உடைக்கப்பட்டு அந்த கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசி பாஜக தங்கள் கட்சிக்கு இழுத்து அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்து பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசுகள் உருவாகி உள்ளன. இது குறித்து பாஜக மீது பல்வேறு விதமான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புள்ளி விவரங்களுடன் பாஜகவை தாக்கி பேசியுள்ளார். "கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 411 பேர் பாஜகவுக்கு சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பல மாநிலங்களின் ஆட்சிகளை பாஜகவினர் கலைத்து ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

பாஜகவினர் தாங்கள் பெற்ற வெற்றியை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசுவார்கள், ஆனால் இது போன்ற செயல்களைப் பற்றி பேச மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களின் தோல்வியை தடம் தெரியாமல் மறைத்து விடுவார்கள். எனவே நாங்கள் அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டுகிறோம். அவர்கள் வெற்றியைப் பற்றி பேசுவதால் இது முக்கியத்துவம் பெறவில்லை. எனவேதான் மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை வெளியிடுகிறோம்' என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

x