பயணிகளிடத்தில் சில்லறை கேட்டுத் தொந்தரவு செய்யாமல் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகர பேருந்துகளில் சில்லறை தொடர்பாக பயணிகள் மற்றும் நடத்துநர்கள் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஒரு சில நேரங்களில் அவை கைகலப்பாக மாறுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழகம் எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்கக்கூடாது என்றும் உரிய பணத்தைப் பெற்று சில்லறைகளை நடத்துநர்கள் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பயணிகளிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை மீறி புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.