தென்காசியில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இருந்து, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக 270 லிட்டர் ஐஸ்கிரீமை சுகாதாரத்துறை அதிகாரி பறிமுதல் செய்தனர்.
தென்காசி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்கின்ற பகுதியில் ஃபைபா என்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்த அன்சாரி என்பவர் நடத்தி வருகிறார். இவர் இங்கிருந்து ஐஸ்கிரீம் தயாரித்து கேரளாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஐஸ்கிரீம் நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில், ரசாயனப் பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தது.
மேலும், தமிழ்நாட்டில் தயாரித்து, மலையாளத்தில் லேபிள் ஒட்டி, கேரளாவில் விற்பனை செய்வதாகவும், ஆனால், இதற்கு இந்த நிறுவனம் முறையான அனுமதியைப் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் அந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.
அப்போது அங்குச் சுகாதாரமற்ற நிலையிலும், ரசாயனப் பொருட்கள் கலந்தும் ஐஸ்கிரீம் தயாரிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததாலும், அதனை முழுமையாக ஆய்வு செய்யும் நோக்குடனும் அதன் குடோனுக்கு அதிகாரி நாகசுப்பிரமணியம் சீல் வைத்தார். மேலும், அங்குத் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 270 லிட்டர் ஐஸ்கிரீமை பறிமுதல் செய்தார்.
குடோனில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் தரத்தை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதால் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட பெயர் ஒன்றாகவும், ஐஸ்கிரீம் தயாரித்து அனுப்பும் பெயர் வேறு ஒன்றாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தென்காசியில் தரமற்ற முறையில் ஐஸ்கிரீம் தயாரித்து வந்த நிறுவனம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!