மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் எம்பியும், திமுக துணைப் பொது செயலாளருமான கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மதுரை பாண்டி கோவில் ரிங்ரோடு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது, “திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறது. இவற்றை முதலமைச்சரிடம் கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்று தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். சிறுகுறு தொழில் செய்யக்கூடியவர்கள் மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள். ரயில்வேயை பொருத்தவரை தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக நிதி குறைவாக தான் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைக்கக்கூடிய சூழலை நாம் பார்க்கிறோம்.
இன்று 100 நாள் வேலையில் பல குழப்பங்கள் உள்ளன. சரியாக சம்பளம் வராத சூழ்நிலை உள்ளது. மக்கள், விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள். மழையால் சென்னை, தென் மாவட்டங்கள் மிக மோசமாக பதிக்கப்பட்டது.
ஆனால், இன்றுவரை வழங்கப்பட்டு வரும் நிவாரணங்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் தான் தந்து கொண்டிருக்கிறார்களே தவிர மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, மூன்று முறை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு அமைச்சர்கள் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் சென்னையையும், தென் மாவட்டங்களையும் பார்வையிட்டு சென்றார்கள். இன்று வரைக்கும் ஒரு பைசா கூட வரவில்லை. இப்படிப்பட்ட தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யக்கூடாது என்று ஒரு மனநிலையில் தான் மத்திய அரசு உள்ளது.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். மகளிருக்கு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் திட்டத்தை எவ்வளவு நிதிநிலை சிக்கல்கள் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி தந்திருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தான் நிறைவேற்ற முடியும். கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.