மசோதாவை ஆராயாமல் கையெழுத்திட வேண்டும் என நினைப்பது நியாயமா? - தமிழக அரசுக்கு தமிழிசை கேள்வி!


தமிழிசை

மாநில அரசுகளின் சட்ட மசோதாக்களை ஆராயாமல் உடனே கையெழுத்திட வேண்டுமென நினைப்பது நியாயமா? என்பதை தமிழக அரசு சிந்தித்து பார்க்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது. அம்மாநில கலைஞர்களுடன் ஆளுநர் தமிழிசை ஆடிப்பாடினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''புதுச்சேரியில் தான் பதவியேற்றவுடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கக்கூறினேன். அதன் பின் ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. பாதுகாப்பற்ற நிலை இங்கு இல்லை. ஆளுநர் மாளிகையை சுற்றி தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்'' என நகைச்சுவையாக பேசிய அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

``தெலங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள். இது அந்தந்த மாநில பிரச்சினை. தமிழகம் மசோதாவை அந்த ஆளுநர் எதிர்கொள்கிறார் என்பது இரு அமைப்புகளுக்கான பிரச்சினை. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. இருந்த போதிலும் மாநில அரசுகள் இயற்றக் கூடிய மசோதாக்களை ஆராயாமல் ஆளுநர் கையெழுத்திட வேண்டுமென கேட்பது நியாயமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ``புதுச்சேரியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தலைமைச்செயலாளரை அழைத்து பேசினேன். முதல்வரிடமும் பேசியுள்ளேன்.

அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது. முதல்வர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமுக செயல்முறையாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தெலங்கானாவிலும் இதே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சினைகளை தீர்வுகாண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுச்சேரியில் இருக்கவேண்டும். அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். தீவிரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது’’ என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x