கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்... பக்தர்கள் அதிர்ச்சி!


கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைப்பு

மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கபாலீஸ்வரர் கோயில்

சென்னை மயிலாப்பூரில் உள்ளது பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயில். பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆலயம், சென்னை நகரின் அடையாளமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செல்கின்றனர். இதனால், எப்போதும், பக்தர்கள் நிறைந்து காணப்படும். வழக்கமாக ஆலயம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டாலும் இரவு 12 மணி வரை கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும்.

கபாலீஸ்வரர் ஆலயத்தில் தீ வைப்பு

இந்நிலையில், நேற்று இரவு கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, கிழக்கு மாட வீதி வாசலில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். அவர் மக்கள் நடமாட்டம் குறைந்த நிலையில், நள்ளிரவு நேரம் திடீரென கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை கோயில் வாசலில் ஊற்றித் தீவைத்தார். எஞ்சிய பெட்ரோலையும் தீயில் தொடர்ந்து ஊற்றி, கொழுந்து விட்டு எரியச்செய்தார். இதனைக் கண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், அதிர்ந்து போய் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைப்பு

இதையடுத்து, மயிலாப்பூர் போலீஸார் கபாலீஸ்வரர் கோயிலுக்கு விரைந்து சென்றனர். ஆனால், தீ வைத்த மர்ம நபர் அதற்குள் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த நாட்களுக்கு முன் இரண்டு இளைஞர்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் நடனமாடி வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் இப்போது கோயில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x