அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணிகளை உறுதி செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, பூத் கமிட்டிகள் அமைப்பது ஆகியவற்றுடன் வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ளதையடுத்து அரசியல் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பிற கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் ராஜூவ் சந்திரசேகர், எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பாஜகவில் தற்போது இணைந்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களின் பட்டியல்:
1. கு.வடிவேல் - கரூர்
2. பி.எஸ்.கந்தசாமி - அரவக்குறிச்சி
3. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான்
4. ர.சின்னசாமி -சிங்காநல்லூர்
5. ஆர். துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர்
6. எம்.வி.ரத்தினம் - பொள்ளாச்சி
7. எஸ்.எம்.வாசன் - வேடச்சந்தூர்
8. எஸ்.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி
9. பி.எஸ்.அருள் - புவனகிரி
10.என்.ஆர்.ராஜேந்திரன்
11.ர.தங்கராசு - ஆண்டிமடம்
12. குருநாதன்
13. வி.ஆர்.ஜெயராமன் - தேனி
14. பாலசுப்ரமணியன் - சீர்காழி
15. திரு.சந்திரசேகர் - சோழவந்தான்
தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த 14 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொத்தாக பாஜக கொண்டு சென்றுள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!