இதுவரையில் தேமுதிக சார்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்திய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. திமுக கூட்டணியில் முதல்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடித்துள்ளது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இன்னும் கூட்டணித் தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன. இந்தநிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்க தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பிரேமலதா விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருதை அறிவித்த பாரத பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் விஜயகாந்தின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்த வேண்டும் என்றும், மாவட்டங்கள் தோறும் விஜயகாந்த்துக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவும் முழு அதிகாரத்தை பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு வழங்கி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.