கோபிசெட்டிபாளையம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு


ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் நேரிட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் வெடி வைத்து, கனிம வளங்களை எடுக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டனர்.

அப்போது, பாறையில் துளையிட்டு வெடிமருந்துகளை நிரப்பும்போது எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட்டது. இதில், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(50), கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர்மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (27) ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பங்களாபுதூர் போலீஸார் நடத்திய விசாரணையில், பெருந்துறை தாசநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மனைவி ஈஸ்வரி கல் குவாரிக்கு உரிமம்பெற்று இருந்ததும், இந்த உரிமம் 2015-ம் ஆண்டு காலாவதியானதும் தெரியவந்தது. எனினும், சட்டவிரோதமாக இரவு நேரங்களில் குவாரியை அவர்கள் இயக்கி வந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஈஸ்வரி, அவரது கணவர் லோகநாதன், மேலாளர் செல்வம், மேட்டூரைச் சேர்ந்த விஜய் ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காரணம் என்ன? தமிழ்நாடு மைனிங் சர்டிஃபிகேட் ஹோல்டர்ஸ் அண்ட் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் சண்முகம் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான சுரங்கங்களில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதில்லை. இதுவே விபத்துகள் நேரிடக் காரணமாகும்.

சுரங்கங்களில் பணிபுரிய சான்றிதழ் பெற்றவர்களை பணியில் அமர்த்தி, உரிய பாதுகாப்புடன் கனிம வளங்களை வெட்டியெடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுக்க உரிமம் பெற்றவர்கள், உரிய விதிகளின்படி செயல்படுகிறார்களா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது விபத்து நேரிட்டுள்ள இடம், யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இடமாகும். இந்த இடத்தில்கல் குவாரிக்கு எப்படி அனுமதிஅளித்தார்கள் என்று தெரியவில்லை. உரிமம் காலாவதியான குவாரிக்கு வெடிமருந்துகளை சப்ளை செய்தது யார் என்பதையும் கண்டறிந்து, உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். சுரங்க சட்டம்குறித்து அறிந்தவர்களை மட்டும்பணியில் அமர்த்தினால், விதிமீறல்களையும், விபத்துகளையும் தடுக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.3 லட்சம் நிவாரணம்: கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த செந்தில்குமார் மற்றும் அஜீத் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்நிவாரணம் வழங்க உத்தரவிட்டுஉள்ளார்.

x