தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 வாரங்களாக போதிய மழை பெய்யாவிட்டாலும் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. நேற்று இரவிலும், இன்று காலையிலும் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
இன்று பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துக்கொண்டு இருந்தனர். பிரதான அருவியில் மலையில் உள்ள பாறையின் ஒரு பகுதி பலமிழந்து இருந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலையில் அந்த இடத்தில் இருந்து கற்கள் திடீரென சரிந்து விழுந்தன. ஆண்கள் குளிக்கும் பகுதியில் கற்கள் விழுந்ததில் அருவியில் குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் 5 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கற்கள் சரிந்த பகுதியில் மேலும் சிறிது கற்கள் பலமிழந்து காணப்பட்டதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவியில் குளித்துக்கொண்டு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன் விரைந்து சென்று பார்வையிட்டார். அருவிப் பகுதியில் மலையில் சரிந்து விழும் நிலையில் உள்ள கற்களை அப்புறப்படுத்த தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.