உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனது வீட்டில் படுக்கையில் ஓய்வெடுத்து வரும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக மதுரை சென்று அரசு நிகழ்ச்சி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார். இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் ஸ்டாலின், அதன் பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு திரும்பிய முதல்வர் ஸ்டாலின், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பழ.நெடுமாறன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து நலம் விசாரிக்க விரும்பினார்.
இதையடுத்து பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து நெடுமாறனிடம் உடல் நலம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். நெடுமாறனின் குடும்பத்தினரும் அப்போது உடனிருந்தனர். அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் முதல்வருடன் சென்றிருந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...