‘காங்கிரஸ் நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்துவிட்டது’ -பகடி பாடும் மோடி


பிரதமர் மோடி - ராகுல் காந்தி

‘தேர்தலில் போட்டியிடும் திராணியை இழந்த காங்கிரஸ், நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்துள்ளது’ என பிரதமர் மோடி பகடியுடன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி உள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த மோடி, எதிர்க்கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்களை தொடுத்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை பகடியுடன் தாக்கினார். மூன்றாம் முறையாகவும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசே மத்தியில் ஆட்சியமைக்கும் என்று வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள், தேர்தல் வெற்றிகள் மற்றும் மக்கள் மத்தியிலான வரவேற்புகள் காரணமாக, பிரதமர் மோடியின் காங்கிரஸ் மீதான தாக்குதலில் புதிய உற்சாகமும் கொப்பளிக்கிறது.

பாஜக - காங்கிரஸ்

“எதிர்க்கட்சிகள் எடுத்திருக்கும் புதிய தீர்மானத்தை பாராட்டுகிறேன். அவர்களது பேச்சும், நடவடிக்கையும் நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சி வரிசையிலே இருக்க அவர்கள் முடிவு செய்திருப்பதை காட்டுகிறது. நீண்ட காலமாக இந்தப் பக்கம் அமர்ந்து இருந்தார்கள்; இனி எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமே அமர முடிவு செய்திருக்கிறார்கள். அதிலும் அவர்களில் பலர் மக்களவையிலிருந்து பாதுகாப்பாக மாநிலங்களவைக்கு மாறி வருகிறார்கள். அவர்களை மக்கள் ஆசீர்வதிக்கட்டும்.

அவர்கள் நன்றாக நாட்டை ஏமாற்றி வந்தார்கள். தலைவர்கள் மாறிய போதும், அதே பழைய பல்லவி தொடர்கிறது. எதிர்க்கட்சிகள் நினைத்திருந்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அந்த நல் வாய்ப்பை தவற விட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்கட்சியாக பங்காற்ற நல்ல வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டனர்.

பிரதமர் மோடி

அக்கட்சியில் திறமையுள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட நபரை(ராகுல் காந்தி) மறைத்துவிடும் என்ற அச்சத்தில், அந்த திறமை மிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இப்படியே காங்கிரஸ் கட்சி தொடந்தால் அது விரைவில் ’கடையை’ மூட நேரிடும்.

தேர்தல்கள் நேரத்திலாவது நன்றாக உழைத்து மக்களுக்காக எதையாவது செய்திருக்கலாம். ஆனால், அதில் அவர்கள் படுதோல்வி அடைந்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் பொறுப்பான எதிர்க்கட்சியாக தங்கள் பொறுப்பை நிறைவேற்ற தவறிவிட்டார்கள்” என்று மோடி தாக்கியுள்ளார்.

x