ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றம்


ஆழியாறு கவியருவியில் நேற்று மாலை ஆர்ப்பரித்துக் கொட்டிய காட்டாற்று வெள்ளம்.

ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆழியாறு வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால் ஆழியாறு கவியருவியில் நேற்று மாலை திடீரென காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை அவசரம் அவசரமாக வெளியேற்றி நுழைவுவாயிலை மூடினர்.

தொடர் மழையின் காரணமாக பல வாரங்களாக மூடப்பட்டிருந்த கவியருவி கடந்த 15-ம் தேதி நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை தற்காலிகமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

x