மக்களவைத் தேர்தலில் பாஜகவிடம் அமமுக 22 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. அதிலும், தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் தோழமை கட்சிகளுடனான பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன. வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பாமக, பாஜக கூட்டணியா அல்லது அதிமுக கூட்டணியா என்பதை இறுதி செய்யாமல் உள்ளது. ஆனால், அந்தக்கட்சி பாஜகவுடனே கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இதில் டிடிவி தினகரனின் அமமுக, ஒபிஎஸ் அணியினர் பாஜகவுடன் கூட்டணி என நீண்ட நாட்களாகச் சூசகமாகத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமமுக, பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் 22 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரக்கோணம், ஆரணி, தென் சென்னை, வட சென்னை, சேலம், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், சிதம்பரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, விருதுநகர் மற்றும் நெல்லை உள்ளிட்ட தொகுதிகளை அமமுக கேட்டுள்ளது. ஆனால், 22 தொகுதிகளை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.