சென்னை: சுகாதாரத் துறையில் 1,474 பேர், கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 547 பேர், அறநிலையத் துறையில் 172 பேர் என மொத்தம் 2,093 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக 27 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், இதுநாள்வரை, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 1,947 உதவி மருத்துவர்கள், 1,291 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வான 4,293 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலகின்கீழ் செயல்படும் இயக்ககங்களில் காலியாகவுள்ள 946 மருந்தாளுநர்கள், மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆக.13-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக 3 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினர்.
மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வான 523 பேருக்கு, ஆக.17-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 3 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இதேபோல் 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்களில் ஒருவருக்கு நியமன ஆணைகளையும் வழங்கினார். மீதமுள்ளவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணைகள் வழங்கப்பட்டன.
நிதித்துறையின் கீழ் இயங்கும், கருவூலக் கணக்குத் துறையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 16 கணக்கு அலுவலர், 118 இளநிலை உதவியாளர், 57 தட்டச்சர் மற்றும் ஒருசுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 192 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி மூலம்கணக்கர் பணியிடங்களுக்கு தேர்வான 537 பேர்மற்றும் பணிக்காலத்தில் காலமானவர்களின் வாரிசுகளுக்கு கருணைப்பணி வழங்கும்அடையாளமாக 10 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இந்துசமய அறநிலையத் துறையின் அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்துக்கு டிஎன்பிஎஸ்சிமூலம் தேர்வான 172 பேருக்குநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு ஆணைகளை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில்மொத்தம் 693 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைகளின் செயலர்கள் சுப்ரியாசாஹு (சுகாதாரம்), பி.சந்திரமோகன் (அறநிலையத் துறை),டி.உதயச்சந்திரன் (நிதி), நிதித்துறை செயலர் (செலவினம்) எஸ்.நாகராஜன், கருவூலக் கணக்கு ஆணையர் கிருஷ்ணனுன்னி, அறநிலைய துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.