விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதியில் காவல் துறை அனுமதி பெறாமல் கட்சிக் கொடிக்கம்பத்தை நடிகர் விஜய் கட்சியினர் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பிரபல முன்னணி சினிமா நடிகரான விஜய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்த விஜய் அந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு இல்லை என்றும் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது கட்சி போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.
இதனைக் கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதியில் கொடிக்கம்பங்களை வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தமிழக வெற்றி கழகத்தின் விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன் தனது ஆதரவாளர்கள் 40-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதியில் வழி நெடுகிலும் பேனர் வைத்து கொடிக்கம்பங்களை நட்டு அதில் விஜய் ரசிகர் மன்ற கொடிகளை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி உள்ளார்.
பொதுவாக கட்சி கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு முன்னதாக அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற்ற வேண்டும். ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் காவல்துறையில் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பங்கள் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பங்கள் வைத்தது தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.