7ம் வகுப்புதான் தகுதி... பியூன் வேலைக்காக குவிந்த பி.டெக் பட்டதாரிகள்!


கேரளாவில் பியூன் வேலைக்காக பி.டெக் படித்த பட்டதாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

கேரளாவில் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த வேலையில் சேர்வதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். ஆனால், அவர்களில் 90 சதவீதம் பேர் பி.டெக் பட்டதாரிகள்.

கேரள அரசு அறிவித்த பியூன் வேலைக்கான கல்வித்தகுதி 7-ம் வகுப்பு. மாதம் 23,000 ரூபாய் ஊதியம். அரசு வேலை என்பதால், பொறியியல் படித்திருப்பதை பற்றி கவலைப்படாத இளைஞர்கள் பியூன் வேலைக்காக குவிந்தது வேலை செய்யலாம் வேலையில்லா வேலை செய்யலாம்திண்டாட்டத்தை காட்டுவதாக உள்ளது.

உணவு டெலிவரி, கால் டாக்சி ஓட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கு பியூன் வேலை எவ்வளவோ மேல் என்று பி.டெக் பட்டதாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பியூன் வேலைக்கு சைக்கிள் ஓட்டத் தெரிய வேண்டும் என்று தேர்வு வைக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்டு 101 பி.டெக் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னும் சில தேர்வுகள் நடத்தி அதன்பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் தேர்வானவர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்த இளைஞர்கள் பியூன் வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருப்பது கேரளாவில் வேலை இல்லாத நிலையை காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2022-ம் ஆண்டு நிலவரப்படி கேரளாவில் 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். 5 லட்சத்தில் 3.2 லட்சம் பேர் பெண்கள். இந்தியாவிலேயே கல்வி அறிவு அதிகம் பெற்றவர்கள் இருக்கும் கேரளாவின் நிலை இவ்வாறு உள்ளது.

x