’’திமுக அரசால் பாஜகவினர் பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். இதேபோல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பாஜக தேசிய தலைமைக்கு அறிக்கை அளிக்க இருக்கிறோம்’’ என கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் பிரம்மாண்ட கட்சி கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அக்கொடி கம்பத்தினை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்.
அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாயும் என கூறப்படுகிறது. இதனிடையே திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, எம்.பிக்கள் சத்யபால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், 4 பேர் குழுவில் இடம்பெற்றுள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் "திமுக அரசால் பாஜகவினர் பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். இதேபோல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பாஜக தேசிய தலைமைக்கு அறிக்கை அளிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தை நாங்கள் தேசிய அளவில் கொண்டு செல்ல உள்ளோம்’’ என கூறினார்.