தூத்துக்குடியில் திடீர் மழை - மதுரை சென்று விட்டு திரும்பிய பெங்களூரு விமானம்


தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையப் பகுதியில் திடீரென பெய்த பலத்த மழை காரணமாக பெங்களூரு விமானம் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பிச் சென்றது. சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து அங்கிருந்து மீண்டும் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சில குறிப்பிட்ட பகுதிகளில் கனமழையும், மற்ற இடங்களில் வெயிலும் அடிக்கிறது. நேற்று தூத்துக்குடி நகர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

அதே நேரத்தில் வாகைகுளம் விமான நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து 47 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மாலை 3.20 மணி அளவில் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

அப்போது கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஓடுதளத்தை விமானியால் சரிவர பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் விமான நிலையத்தின் மேலே வட்டமடித்த விமானம் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.

அங்கு விமானத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் அந்த விமானம் மாலை 5.55 மணிக்கு தூத்துக்குடி வந்து பயணிகளை இறக்கி விட்டது. பி்ன்னர் இங்கிருந்து பெங்களூரு செல்வதற்கு தயாராக இருந்த 70 பயணிகளை ஏற்றிச் சென்றது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து மாலை தூத்துக்குடி வந்த விமானம் மழை குறைந்த காரணத்தால் வழக்கம் போல் தரையிறங்கி, பயணிகளை ஏற்றிச் சென்றது.

x