காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மத்திய பிரதேசத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட சமாஜ்வாதி கட்சி முனைப்பு காட்டியது. ஆனால் காங்கிரஸ், அந்த கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், தங்களுக்கு சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை விடுத்தது. இதனையும் காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி, பிச்சோரி தொகுதிக்கு சந்திரபால் யாதவ், ராஜ்நகர் – ராம்குவார் ரெக்வார், விஜயராகவ்கார் – ஷிவ் நாராயண் சோனி, தத்லா – டோல் சிங் பூரியா மற்றும் பெட்லாவாத் – ராமேஷ்வர் சிங்கார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,‘ மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்கு இல்லாத 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். அது குறித்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் நாங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்’ என்றார். இதனால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!
நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!