சும்மா கிடக்கும் நிதியால் என்ன பயன்?- ஆவேசப்படுகிறார் அமைச்சர் சேகர்பாபு!


கோயம்பேடு கோயில் நிகழ்ச்சியில் சேகர்பாபு

கோயில் நிதியை கலாச்சார மையத்திற்கு செலவிடுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, சும்மா கிடக்கும் நிதியால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் - வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரூ.53.90 லட்சத்தில் புதிய மரத்தேர், ரூ.85.40 லட்சத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம், ரூ.49 லட்சத்தில் அன்னதானக் கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர், இதுவரை 1,093 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும். கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,472 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதி மூலமாக ரூ.29 கோடியில் அமைக்கப்படும் புதிய கலாச்சார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டுக்காக அக்கோயில் அறங்காவலர்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாச்சாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கோயில் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. அதைக் கொண்டு பக்தர்களின் மேம்பாட்டுக்காக செலவிடுவது குற்றம் ஆகாது.

எனவே, சட்டத்துக்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாச்சார மையத்துக்கு பயன்படுத்த இருக்கின்றனர்" என்று கூறினார்.

x