ஆம்னி பேருந்துகள் இயங்கும்... அரசுப் பேருந்துகளும் தயார்... அமைச்சர் உத்தரவாதம்!


அமைச்சர் சிவசங்கர்

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதற்காக அச்சப்பட வேண்டாம். அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டன. அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படி கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளில் அதிரடியாக சோதனையிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்த 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு இல்லாமல் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்

இது குறித்து இன்று பதிலளித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், "போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளை பிடிப்பது அதிக கட்டணத்திற்காக மட்டுமல்லாமல் பிற விதிமுறை மீறல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தான். மேலும் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தீபாவளிக்கு முன்னதாகவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாவிட்டால் அரசு சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் , அச்சம் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆம்னி பேருந்து போராட்ட அறிவிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்த 80 சதவீத பேருந்துகளும் இன்று கட்டாயம் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

x