கெளதமி விவகாரம்; குஷ்பூவை சாடும் காயத்ரி ரகுராம்!


காயத்ரி ரகுராம்

’’குண்டர்கள், பண மோசடி செய்பவர்கள் மற்றும் பாஜக பெண் உறுப்பினர்களை அவமரியாதை செய்பவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சீனிவாசன் போன்றவர்களின் பேச்சை கேட்டு பாஜகவினர் புரிந்துக் கொள்ளுங்கள்’’ என நடிகை குஷ்பூவை நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.

பிரபல நடிகையான கௌதமி பாஜகவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அண்மையில் அன்பழகன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் மோசடி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்பழகனுக்கு ஆதரவாக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் அவர் விலகல் குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில், "எனது சக உறுப்பினரான கௌதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்; அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’திறமையற்ற பா.ஜ.க தலைவர்களுக்கே பெருமை சேரும். அந்த குண்டர்கள், பண மோசடி செய்பவர்கள் மற்றும் பாஜக பெண் உறுப்பினர்களை அவமரியாதை செய்பவர்களை கண்டிக்கவும். பேராசிரியர் சீனிவாசன் போன்ற அவர்களின் காலை தந்தி டிவி நேர்காணலைப் பாருங்கள், கௌதமி மேடத்தைப் பற்றி அவர் எப்படி பேசினார் என்று பாருங்கள்.

பேராசிரியர் சீனிவாசன் மீதான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களில் பாருங்கள், அவர் எப்போது பாஜகவில் சேர்ந்தார், அவருக்கு எப்படி பதவி கிடைத்தது என்று கேட்கலாமா? குறிப்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் நிர்வாக உறுப்பினராக நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

x