உடல்நிலை சரியில்லாத போது அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் என்னை தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார். உடனே நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் திமுக மற்றும் விசிக மெளனம் காத்து வந்த நிலையில், நேற்றும் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னை, நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
’’வருகிற நாடாளுமன்ற தேர்தல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் தேர்தல். பாஜக ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிவிடுவார்கள். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
உடனே திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக உழைக்கும்’’ என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.